நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்கத்தால், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் உள்பட உலகின் பல முக்கியப் பங்குச் சந்தைகள், நிலையற்ற தன்மையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

நியூயார்க் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத பெரும் சரிவு ஏற்பட்டது. அதேசமயம், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

ஐரோப்பாவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் தொடக்கநிலை லாபத்தை இழந்த நிலையில், ஆசியப் பங்குச் சந்தைகள் பரவலான பாதிப்பை சந்தித்தன. அமெரிக்கப் பங்குச் சந்தையோ லாபத்திற்கும் நஷ்டத்திற்கும் இடையே ஊசலாடியது.

அதேசமயம், அரசுகள், கொரோனா தொடர்பான என்னவிதமான தடுப்பு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்கின்றன என்பதன் அடிப்படையில் நிலைமைகள் மாறும் என்று கூறப்படுகிறது.

முதலீட்டாளர் அரசின் தடுப்பு நடவடிக்கைகளைப் பெரிதும் நம்பியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை பங்குச் சந்தையின் நிலையற்றத் தன்மை உச்சநிலையை அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஸ் பங்குச் சந்தையில் சிஏசி 0.8% சரிந்து 3,852க்கும், ஜெர்மனியில் டிஏஎக்ஸ் 1% சரிந்து 8,650க்கும், பிரிட்டனில் 1% சரிந்து 5,100க்குமாக நிலவரம் இருந்தது.