துபாய்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதில் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில், 430 புள்ளிகள் & 71.67% வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 420 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாமிடத்திலும், ஆஸ்திரேலியா 332 புள்ளிகள் மட்டுமே பெற்று மூன்றாமிடத்திலும் உள்ளன.

இந்திய அணி, இறுதிப் போட்டி குறித்து எந்த கவலையுமில்லாமல் இருக்க வேண்டுமெனில், இங்கிலாந்திற்கு எதிரான தொடரை 4-0 அல்லது 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 என்ற கணக்கில் வென்றாக வேண்டும். அப்படி வென்றால், இந்திய அணிக்கு மொத்தமாக 505 புள்ளிகள் கிடைக்கும் மற்றும் அதன்மூலம் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறலாம்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, அடுத்ததாக தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் செல்லவுள்ளது. அந்த சுற்றுப்பயணம் நிகழவில்லை என்றால், அவர்கள், நியூசிலாந்திற்கு கீழே 70% வெற்றி விகிதத்தைப் பெறுவதோடு, இந்தியாவை டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீழ்த்தாத பட்சத்தில், அவர்களின் இறுதிப்போட்டி கனவு நனவாகாமலேயே போய்விடும்.

அதேசமயம், வேறு எந்த அணிகளுடைய வெற்றி-வாய்ப்புகளைப் பற்றியும் கவலைப்படாமல், ஆஸ்திரேலியா நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில், அவர்கள் தென்னாப்பிரிக்க அணியை 3-0 அல்லது 2-0 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும்.