உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் ரோபோக்கள் சீனவில் அறிமுகம்

--

உலகத்திலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் வாசிக்கும் ஏஐ (artificial intelligence) ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

china

ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.

” இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும் “ என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் நவம்பர் 7ம் தேதி நடந்து முடிந்த உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோக்கள் தினசரிப் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது இன்னும் தெரியவில்லை.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயரிய தொழில்நுட்பங்களில் சீனா உலகளாவிய அளவில் முதலிடத்தைப் பிடிக்கத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.