அதிசயம்: இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த குழந்தை!

உலகிலேயே முதன் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பை மூலம் குழந்தை பிறந்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு இத்தகைய அரிய நிகழ்வு நடந்துள்ளது.

உலகளில் 10 முதல் 15 சதவிகித பெண்கள் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது. சராசரியாக 500 பெண்களில் ஒருவருக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படுவதாக மருத்துவத்துறை ஆய்வு தெரிவித்துள்ளது. அவ்வாறு கர்ப்பப்பை கோளாறால் பாதிக்கப்பட்ட பெண் அறுவை சிகிச்சை மூலம் பிறரின் கர்ப்பப்பையை தானமாக பெற்று குழந்தையை ஈன்றெடுக்க மருத்துவத்துறையில் சாத்தியம் உள்ளது.

uterus

அந்த வகையில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பிறவிலேயே கர்ப்பப்பை இல்லை. அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியதால், வலிப்பு நோயால் இறந்த 45வயது பெண்ணின் கர்ப்பப்பையை தானமாக பெற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார்.

மாற்று கர்ப்பப்பையை பொறுத்தும் அறுவை சிகிச்சையை சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் டேனி இஷ்ஜென் மேற்கொண்டார். இந்த அறுவை சிகிச்சை 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளாப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு அந்த பெண்ணிற்கு ஆரோக்கியத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 2.550 கி.கி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக அமெரிக்கா, செக் குடியரசு மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இறந்த பெண்ணின் கர்பப்பையை தானமாக பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் யாருக்கும் குழந்தை பிறக்க வில்லை. முதல் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் மட்டுமே குழந்தை பெற்றுள்ளார்.