உலகின் நீளமான ரயில்வே குகைப் பாதை – விரைவில் பயன்பாட்டிற்கு..?

ஜெனிவா: சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையின் கீழ், பல்லாயிரம் அடி ஆழத்தில் மலையைக் குடைந்து கட்டப்பட்டு வரும் ரயில்வே குகைப் பாதைப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயை அடைந்துள்ளன.

அதிவேக மற்றும் உயர்திறன் கொண்ட இந்த ரயில்வே குகைப் பாதையின் நீளம் மொத்தம் 57 கி.மீ. அதாவது, 35 மைல்கள். இந்த ரயில்வேப் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், உலகிலேயே நீளமான ரயில்வே குகைப்பாதையாக இது திகழும்.

இது மொத்தம் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கொண்ட ஒரு ரயில்வே திட்டமாகும். ஆல்ப்ஸ் மலை சிகரங்களுக்கு 8000 அடிகள் கீழே இந்த குகை ரயில் பாதை அமைகிறது.

இந்த ரயில்வே திட்டத்தில் மொத்தம் 2500 பேர் பணியாற்றுகின்றனர். இந்தப் பணிக்கு 30 மில்லியன் டன் கிரானைட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மின்சாரம், சிக்னல் மற்றும் தகவல்தொடர்பு நோக்கங்களுக்காக ஆயிரக்கணக்கான கி.மீ. நீளம் கொண்ட கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியானது தற்போது முடியும் தருவாயில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.