உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் யார்? வெளியான பட்டியல்! ஆச்சரியம் கலந்த சுவாரசிய தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளை அச்சுறுத்திய ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்ட நிலையில், உலக தீவிரவாதிகளின் தலைவர் என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது.

பெரியண்ணன் அமெரிக்காவை ஆட்டி படைத்த அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டார். அபோதாபாதில் அவரை அமெரிக்க படைகள் காலி செய்து, சாம்பலை கடலில் கரைத்தது.

அதனின் தொடர்ச்சியாக வேரூன்றி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஐஎஸ் தலைவர் அல்பாக்தாதியை அண்மையில் வேட்டையாடப்பட்டார். பின்லேடனுக்கு பிறகு, மிகப்பெரிய வெற்றியாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

அல் பாக்தாதி மரணத்துக்கு பிறகு, இப்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத தலைவர் (அல்லது) டான் என்று பார்த்தால் சில பட்டியல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சொல்லப் போனால் தேடப்படும் தீவிரவாத தலைவர்கள் என்று அவர்களை கூறலாம்.

அமெரிக்காவின் எப்பிஐ, இந்தியாவின் என்ஐஏ ஆகியவை ஆண்டுதோறும் இந்த தலைவர்களை பட்டியலிடும். போர்ப்ஸ் இதழும் கூட இது போன்ற பட்டியல்களை வெளியிட்டது உண்டு.

அல் ஜவாஹரி:

இன்றைய சூழ்நிலையில், உலக நாடுகள் தேடும் தீவிரவாதிகள் யார், யார் என்று பார்க்கலாம். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அல் ஜவாஹரி. பின் லேடனுக்கு பிறகு, அல் கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர்.  25 மில்லியன் டாலரை அவரது தலைக்கு நிர்ணயித்து இருக்கிறது அமெரிக்கா.

1998ம் ஆண்டு கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதல், 2000ம் ஆண்டு ஏமனில் தாக்குதல், 2001ம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்கு உதவியது என அவரின் தீவிரவாத தாக்குதல் பட்டியல் ஏராளம்.

அல்கொய்தாவில் ஒரு சிறு குழுவை, சக்திவாய்ந்த நபர்களை அருகில் வைத்து கொண்டு நடத்தி வருகிறார். தெற்காசியா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அவரது அமைப்பு அவ்வப்பொழுது தாக்குதல்களில் இறங்கி வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போது, அமெரிக்கா மீது தாக்குதலுக்கு காத்திருப்பது தனிக்கதை.

ஹபீஸ் சையது:

அல் ஜவாஹரிக்கு பிறகு அடையாளம் காணப்படுவர் ஹபீஸ் சையது. பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு தீவிரவாதி. இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். பாகிஸ்தான் தேர்தல் களத்தில் இலகுவாக அங்கு நடமாடியவர்.

 

அவரது இயக்கத்தினர் தேர்தல்களில் இறங்கி, மிகப் பெரிய பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். ஹபீஸ் சையது தலைக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் தொகை 10 மில்லியன் அமெரிக்க டாலர்.

ஜமாத் உத் தவாவை நிறுவியவர். இந்தியா, பாகிஸ்தானில் இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். அந்த இயக்கத்தின் ராணுவ பிரிவு தான் லஷ்கர் இ தொய்பா. இந்தியாவில் மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களின் மூளையாக செயல்பட்டவர்.

சிராஜிதின் ஹக்கானி:

ஹக்கானி நெட்வர்க் என்பதின் தலைவர் இவர். ஆப்கானிஸ்தானை தாலிபான்களின் கைக்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். ஏப்ரல் 2008ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்.

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில் நிகழும் தீவிரவாத தாக்குதல்ளுக்கு காரணமாக இருப்பவர். அவர் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்வதாக அறியப்படுகிறது. அவரது தலைக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலை 10 மில்லியன் அமெரிக்க டாலர்.

அப்துல்லா அகமது அப்துல்லா:

இவரும் அல் கொய்தாவின் மூத்த தலைவர். அதன் துணை அமைப்பான மஜ்லிஸ் அல் சுரா அமைப்பின் பொறுப்பில் இருப்பவர். 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2015ம் ஆண்டு கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் விடுவிக்கப் பட்டவர். அல் கொய்தாவுக்கு தேவையான நிதி உதவி, கட்டளைகளை செயல்படுத்த திட்டமிடுதல் என பல பொறுப்புகளில் இருப்பவர் என்று நம்பப்படுகிறது. அவரது தலையின் விலை 10 மில்லியன் டாலர்.

சைப் அல் அடல்:

அல் கொய்தாவின் ராணுவ குழுவின் தலைவர். 2015ம் ஆண்டு ஈரானால் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டவர். இவருடன் விடுவிக்கப்பட்ட மற்றொரு தீவிரவாதி அப்துல்லா அகமது அப்துல்லா.  சைப்அல் அடல் தலைக்கு விதிக்கப்பட்டிருப்பது 10 மில்லியன் டாலர்.

உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் என்ற பட்டியலும் வெளியாகி இருக்கிறது. தேசிய புலனாய்வு அமைப்பின் பட்டியலில் மொத்தமுள்ள 258 பேரில், ஜாகீர் ரஹ்மான் லக்வி, ஹாசின் சையது, சாஜித் மஜித் உள்ளிட்ட 15 பேர் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். மாவோயிஸ்ட் இயக்க தலைவர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

முப்பள்ளா லக்ஷ்மன் ராவ்:

தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இவருக்கு கணபதி என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. தற்போது அவருக்கு 70 வயதாகிறது. உடல் நலிவுற்று இருப்பதால், மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுசெயலாளராக உள்ளார்.

அண்மையில் அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பீப்புள்ஸ் மார்ச்சில், அவரது பேட்டி வெளியானது. அமைப்பு ரீதியாக ஏற்பட்ட சில தவறுகளால் முக்கிய தலைமை பொறுப்பாளர்களை இழந்துவிட்டோம். புதிய திட்டங்களை செய்ய முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார்.

நம்பளா கேசவ ராவ்:

பசவராஜ் என்பது இவரின் மற்றொரு பெயர். ராணுவ நடவடிக்கைகள், வெடிகுண்டுகளை பற்றி நன்கு அறிந்தவர். அதில் அவர் கைதேர்ந்தவர். மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொது செயலாளராக இருப்பவர். அவரது தலையின் விலை ரூ.10 லட்சம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: al qaida, bin laden dead, most wanted terrorists, National Investigation Agency, terrorist al Baghdadi, terrorist list, உலகின் தேடப்படும் தீவிரவாதிகள், தீவிரவாதி அல்பாக்தாதி, தீவிரவாதிகள் பட்டியல், தேசிய புலனாய்வு அமைப்பு, பின்லேடன் மரணம்
-=-