டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், கொரோனாவுக்கு எதிரான போரில் இறக்கிவிடப்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் ஃபுகாகு(Fugaku) சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்காவின் ஐபிஎம் மெஷினைவிட 2.8 மடங்கு வேகமாக கணக்கிடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து, உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெயரைப் பெற்றது.

‘சம்மிட்’ என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவின் ஐபிஎம் மெஷின், Top500 பட்டியலில், கடந்த 4 முறையும் முதலிடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் ஃபுகாகு வெற்றிபெற்றதையடுத்து, இத்துறையில் அமெரிக்க – சீனாவின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் முதல்முறையாக ஜப்பான் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இந்த சூப்பர் கம்ப்யூட்டர், கொரோனா வைரஸ் பரவுதலுக்கான துளிகள், எப்படி அலுவலக இடங்கள், ரயில்கள் ஆகியவற்றில் பரவுகிறது என்பதை உருவகப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு, இது முழுநேரப் பணியில் ஈடுபடுத்தப்படும்போது, கொரோனா வைரஸ் தொடர்பான சிறந்த சிகிச்சையைக் கண்டறிவதை எளிமைப்படுத்தும் பணியில் உதவிபுரியும் என்று கூறப்படுகிறது.