வங்கிகளின் அலட்சிய சேவை: எஸ்பிஐ வங்கி மீது கடந்த ஆண்டு 47ஆயிரம் புகார்கள் பதிவு! ரிசர்வ் வங்கி தகவல்

டில்லி:

ங்கிகள் மீதான புகார்கள் கடந்த ஆண்டு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. வங்கிகளின் அலட்சிய சேவை காரணமாக  எஸ்பிஐ வங்கி மீது கடந்த ஆண்டு 47ஆயிரம் புகார்கள் பதிவாகி இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களின்1.63 லட்சம் புகார்கள் வங்கி குறைதீர்ப்பு மையங்களில் (banking ombudsman)  கடந்த ஆண்டு  குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தை ஆண்டை காட்டிலும்,  25 சதவிகிதம் அதிகம் என்று தெரிவித்துள்ள நிலையில்,  இந்த புகார்களில், சுமார் 96 சதவிகித புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த 1.63 லட்சம் புகார்களில்  47ஆயிரம் புகார்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீதுதான் குவிந்துள்ள தாகவும் தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

அதையடுத்து, எச்டிஎப்சி வங்கி மீது  12 ஆயிரம் புகார்களும், அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி பேங்க் மீது  1,450 புகார்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற புகார்கள் குவிவதற்கு காரணம், இந்த வங்கிகள், விதிகளின்படி வெளிப்படையாக செயல்படுவதில்லை என்றும், வாடிக்கையாளர்களை சரிவர நடத்துவது இல்லை என்றும் 22.1 சதவிகிதம் புகார்கள் வந்துள்ளதாக  குற்றம் சாட்டி உள்ளது.

மேலும்,   ஏ.டி.எம் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக, 15.1 சதவிகிதமும். கிரெடிட் கார்டு தொடர் பாக 7.7 சதவிகிதமும், இணையதள வாயிலான நெட் பேங்கிக் வங்கிச் சேவை குறித்து 5.2 சதவிகித புகார்களும் பதிவாகி இருப்தாகவும்,  ஓய்வூதியம் குறித்த புகார்கள், முன்கூட்டியே தெரிவிக்காமல் எடுக்கப்படும் சேவைக் கட்டணம் வசூலிப்பது, கடன், டெபாசிட், நேரடி விற்பனையில் ஈடுபட்டுள்ள முகவர்கள், வாராக் கடன் மீட்பு நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக தலா 5 சதவிகித புகார்களூம் பதியப்பட்டு தீர்வு காணப்பட்டு இருப்பதாகவும்  தெரிவித்து உள்ளது.

வங்கி குறைதீர்ப்பாயங்கள், வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள ஆர்பிஐயின் அறிக்கையில்,  ஒரு புகாரை பரிசீலிக்க ஆகும் சராசரி செலவு, 3,626 ரூபாயிலிருந்து, 3,504 ரூபாயாக குறைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.