தாஜ்மஹால் அழகில் மயங்கிய இவாங்கா டிரம்ப்

ஆக்ரா: 

தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய இவாங்கா ட்ரம்ப், தனது உறவினர்களுக்கு போன் செய்து நேரடியாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நேற்று மதியம் நடைபெற்ற “நமஸ்தே ட்ரம்ப்” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்காக, ட்ரம்ப் தனது குடும்பத்துடன் டெல்லி ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்பட்டார்.

ஆக்ரா வந்தடைந்த அவர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தமது மனைவி மெலானியாவுடன் மாலை நேர சூரியஒளியில் தாஜ்மஹாலின் அழகை கண்டு ரசித்தார்.
அப்போது தாஜ்மஹாலின் அருமை, பெருமைகளை சுற்றுலா வழிகாட்டி ட்ரம்பிடம் சொல்ல, சொல்ல அந்த தகவல்களை கேட்டு ட்ரம்ப் வியப்படைந்தார். மனைவி மெலானியாவுடன் அவர் தாஜ்மஹாலில் புகைப்படமும் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்.

இவரை போன்றே, ட்ரம்பின் மகளான இவாங்காவும், தனது கணவர் ஜாரெட் குஷ்னருடன் தாஜ்மஹாலை கண்டு களித்தார். அத்துடன் அங்கு தமது கணவருடனும், தனியாகவும் அவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

தாஜ்மஹாலின் அழகில் மயங்கிய இவாங்கா ட்ரம்ப், தனது உறவினர்களுக்கு போன் செய்து நேரடியாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுமட்டுமின்றி தாஜ்மஹால் முன்பு நின்று வகை வகையாக போட்டோ எடுத்து கொண்டு, அதை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.