அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்த பதக்கம் வென்ற வீராங்கனை
ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்துள்ளார். தனக்கு உதவி தேவைப்பட்டபோது மாநில அரசு உதவ முன்வரவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தோனேசியாவில் தலைநகரான ஜகாத்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இம்மாதம் 2ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப்பதக்கங்களை வென்றனர். இந்தியா 69 பதக்கங்களை பெற்று தரவரிசைப்பட்டியலில் 8வது இடத்தினை பெற்றது. ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி மத்திய, மாநில அரசுகள் பரிசுத் தொகையை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய போட்டியில் பெண்களுக்கான மல்யுத்த பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற டெல்லியை சேர்ந்த திவ்யா கக்ரன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “நாம் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றேன். அப்போது நீங்கள் எனக்கு எதிர்காலத்தில் அதிக உதவிகளை செய்வதாக கூறினீர்கள். நான் உதவி கேட்டபோது எந்தவித பதிலும் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது என்னை வாழ்த்தி பரிசுக்களை வழங்குகிறீர்கள். ஆனால், எனக்கு உண்மையில் உதவி தேவைப்பட்டபோது நீங்கள் வழங்கவில்லை “ என்று கூறினார். மேலும், எனக்கு முறையாக உதவி செய்திருந்தால் நான் ஆசிய போட்டியில் தங்கம் வென்றிருப்பேன் “ என்றார்.
மத்திய அரசு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற ஒருவர், மாநில அரசின் மீது அதிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நேரிடையாக குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.