துப்பாக்கியுடன் காரில் வந்தவரால் சென்னையில் பரபரப்பு

சென்னை

சென்னை வியாசர்பாடியில் துப்பாக்கியுடன் காரில் ஒரு வாலிபர் வந்ததை  ஒட்டி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இரவில் காவல்துறையினரால் வாகன சோதனைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும் அவ்வகையில் சென்னை வியாசர்பாடியில் காவல்துறையினர் சோதனை இட்டுக் கொண்டு இருந்தனர்.    அவர்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு திடுக்கிடும் தகவல் வந்தது.

அந்த தகவலின் படி சென்னை கடற்கரையில் இருந்து ஒரு வாலிபர் காரில் துப்பாக்கியை எடுத்து வருவதாக தெரிய வந்தது.   இதனால் எச்சரிக்கை அடைந்த காவல்துறையினர் கடுமையான சோதனையில் ஈடுபட்டனர்.    அப்போது அங்கு காரில் வந்த குகன் என்னும் 27 வயது இளைஞரின் காரில் துப்பாக்கி இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவரை விசாரித்ததில் அது ஒரு பொம்மை துப்பாக்கி என தெரிய வந்தது.   குகன் திருவிழாக்களில்  பலூன் சுடும் கடை நடத்துவது வழக்கம்.   அவ்வகையில் வியாசர்பாடி அம்மன் திருவிழாவில் அவர் பலூன் சுடும் கடையை நிறுவ இருந்தார்.   அதற்கு தேவையான துப்பாக்கியை அவர் எடுத்து வந்துள்ளார்.

மெரினாவில் இரவு உணவு அருந்திவிட்டு அங்கிருந்த கடையில் இருந்து துப்பாக்கி வாங்கிக் கொண்டு  வரும் போது யாரோ காரில் இருந்த துப்பாக்கியைக் கண்டு பயந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.  அதனால் தேவையற்ற பரபரப்பு உண்டாகியது.   விவரங்களை குகனிடம் எழுத்து பூர்வமாக பெற்ற பின் அவரை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.