ஏராளமான குளறுபடிகள் – கருத்துக்கணிப்பு தகவல்கள் தளத்திலிருந்து நீக்கம்

புதுடெல்லி: ஏராளமான குளறுபடிகளும் தவறுகளும் சுட்டிக் காட்டப்பட்ட பிறகு, இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா தளத்தில், பல தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதான், பாரதீய ஜனதா கூட்டணிக்கு, போனால் போகட்டும் என்ற வகையில், மிக அதிக இடங்களை வாரி வழங்கியது.

ஆனால், அப்படி வழங்கியதுகூட பிரச்சினையில்லை. அதில் மாநில வாரியாக குறிப்பிடப்பட்ட விபரங்கள் பலவும் தவறானவை. எனவே, அந்த தவறுகள் பரவலான கேலி – கிண்டல்களுக்கு உள்ளான பின், அவை, சம்பந்தப்பட்ட தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஒரு உதாரணத்தைக் கூற வேண்டுமானால், உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள 5 மக்களவைத் தொகுதிகளின் பெயர்களும் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்திலும் தாமரைக் கட்சி வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டால், மத்திய சென்னை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அங்கு காங்கிரஸ் போட்டியிடவே இல்லை என்பது வேறு விஷயம்.

இவையெல்லாம் சில சாம்பிள்கள்தான். இன்னும் ஏராளமான தவறுகளைக் கூறலாம். எனவே, தற்போது, அந்த தளத்தில் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக விபரங்களைத் தேடினால் அவை அழிக்கப்பட்டுள்ளன.