அகமதாபாத்: குஜராத்தில், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தவறான தகவல்களை, அம்மாநிலத்தின் பாரதீய ஜனதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கேஆர் கோஷ்டி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

மாநில சுகாதாரத் துறையில் இருக்கும் காலிப் பணியிடங்கள் தொடர்பாக பத்திரிகையில் வெளியான அறிக்கை குறித்து, மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது குஜராத் உயர்நீதிமன்றம்.

இதற்கு பதிலளித்த போதுதான், மாநில பா.ஜ. அரசு தவறான தகவல்களைக் கொடுத்ததாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார் கேஆர் கோஷ்டி.

அவர் தனது தகவலில் கூறியுள்ளதாவது; குஜராத் மாநில மக்கள்தொகையில் 68% பேர் கிராமப்புறங்களிலும், 32% பேர் மட்டுமே நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர். ஆனால், குஜராத்தில் இருக்கும் மருத்துவர்களில், 80% பேர் நகர்ப்புறங்களிலும், வெறும் 20% பேர் மட்டுமே கிராமப்புறங்களிலும் பணியமர்த்தப்படுகின்றனர்.

கிராமப்புறங்களிலுள்ள சுகாதார மையங்களில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் 90% அளவிற்கு காலியாக உள்ளன.

மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடங்களில் 88% காலியாகவும், நிலை 1 ஸ்பெஷலிஸ்டுகளில் 80% காலியாகவும், நிலை 2 மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களில் 19% காலியாகவும், நிலை 2 பல் மருத்துவப் பணியிடங்களில் 24% காலியாகவும் உள்ளதாக பல்வேறு விபரங்களைப் பட்டியலிட்டுள்ள அவர், மாநில அரசு, நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை அளித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.