சித்தூர்: ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிட்டதாக தவறாக கருதிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூரை அடுத்த தொட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான பாலகிருஷ்ணய்யா. மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக சில நாட்கள் முனபு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதய துடிப்பு அதிகமானதால் ஆலோசனைக்காக வந்துள்ளனர். மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. ஆனாலும், தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக எண்ணிக்கொண்டார்.

மருத்துவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் சமாதானம் ஆகவில்லை. உறவினர்கள் கூறியும் அதை ஏற்க பாலகிருஷ்ணா மறுத்து விட்டார். யாரும் தன்னிடம் நெருங்கி வரவேண்டாம் என்று கூறியபடி இருந்திருக்கிறார்.

இந் நிலையில் ஊர் மக்களுக்கு தமது வைரஸ் பாதிப்பு பரவிவிடும் என்று ஆழமான எண்ணியவர் கடைசியில் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து அவரது மனைவி கூறுகையில், தொற்று இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதாக பேச ஆரம்பித்துள்ளார்.  மற்றவர்களுக்கு பரவ கூடாது என்பதற்காக முகமூடி அணியுமாறு சொன்னார்.

அவருக்கு அதிக விழிப்புணர்வு இல்லை. விசித்திரமாக நடந்து கொள்ளத் தொடங்கிய அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றார். அவரது மகன் கூறுகையில், தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நம்பிய அவர், யாரையும் அணுக விடவில்லை.

நாங்கள் அவருக்கு அருகில் செல்ல முயன்றபோது அவர் எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினார். கிராமத்திற்கு ஆபத்து என்பதால் உடனடியாக தனது வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்று கூறினார்.