மதுரை:

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தவர் பிற்பகலில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின்  உரையை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழி பெயர்த்து பேசினார். அப்போது அவர் மோடியின் உரையை தவறாக மொழி பெயர்த்தது கூட்டத்தில் இருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த தவறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மொடியின் பேச்சின்போது,  பாம்பன் ராமேஸ்வரத்தை தனுஸ்கோடியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்கான திட்டம் ரூ. 2ஆயிரத்து 100 கோடியில்  செயல்படுத்தப் படும் என்று கூறினார்.

ஆனால், இதை  தமிழில் மொழி பெயர்த்த எச்.ராஜா 2100 கோடிக்கு பதிலாக 21 ஆயிரம் கோடி மொழி பெயர்து பேசினார். இதைக்கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 2100 கோடிக்கும் 21ஆயிரம் கோடிக்கும் வித்தியாசம் தெரியாதவராக ராஜா என கேள்வி எழுப்பினர்.

நாட்டின் பிரதமர் பேசும் பேச்சை சரியாகக்கூட மொழி பெயர்க்க தெரியாத இவருக்கு தேசிய செயலாளர் பதவி ஒரு கேடா என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக் உ லக அளவில் டிவிட்டரில் டிரென்டிங்கான நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் எச்.ராஜாவின் மொழி பெயர்ப்பு குறித்து மீம்ஸ் போடப்பட்டு வைரலாகி வருகிறது.

இது பாஜகவினரிடையே அதிர்ச்சியையும், பெரும் பின்னடைவையும் உருவாக்கி உள்ளது.