தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. கல்லூரிப் பேராசிரியராக விஜய்யும், கல்லூரி மாணவராக சாந்தனுவும் நடித்து வருகிறார்கள்.

‘தளபதி 64’ படத்தை ரூ.32 கோடிக்கு சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மட்டும் இன்றி விஜய் சேதுபதியும் இருப்பதால் தான் இந்த பெரிய தொகைக்கு டீல் முடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை தயாரிக்கும் பணியிலிருந்து சேவியர் பிரிட்டோ விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினருக்கும் சேவியர் பிரிட்டோவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இவருக்குப் பதிலாக லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.