பீஜிங்

சீனாவின் ஜியோமி மொபைல் நிறுவனம் இரு மடிப்பு ஸ்மார்ட்  போன் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது பல மொபைல் நிறுவனங்கள் மடித்து வைக்கக் கூடிய ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.  சாம்சங் நிறுவனம் ஏற்கனவே ஒரு மடிக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை வெளியிட்டது.   மற்றொரு மொபைல் நிறுவனமான ஃப்ளெக்ஸ் பால் என்னும் மொபைல் நிறுவனமும் அது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டது.

தற்போது இந்த வரிசையில் சீனாவின் புகழ் பெற்ற மொபைல் நிறுவனமான ஜியோமி இணைந்துள்ளது.   இன்று ஜியோமி நிறுவன தலைவர் லின் பின் ஒரு வீடியோவை சீன சமூக தளமான வெய்போ வில் வெளியிட்டுள்ளார்.  சுமார் ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் நிறுவனத்தின் இரு மடிப்பு ஸ்மார்ட் போன் மாடல் காட்டப்படுகிறது.

இந்த மாடல் குறித்த எந்த ஒரு விவரமும் வீடியோவில் கூறப்படவில்லை.   விடியோவில் லின் பின் அந்த ஸ்மார்ட் போனை இரு மடிப்பு மடித்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொள்வதாக காணப்படுகிறது.  டாப்லட்  என கூறப்படும் கைக்கணினியின் அளவில் அந்த ஸ்மார்ட் போன் உள்ளது.

இது ஒரு மாதிரி மொபைல் எனவும் விரைவில் இதன் உற்பத்தி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.   மற்ற மடிக்கும் போன்களின் மாதிரி போல் இல்லாமல் இது மிகவும் மெல்லியதாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ரன.   இதன் மூலம் சாம்சங் உள்ளிட்ட மொபைல் நிறுவனங்களின் வரிசையில் ஜியோமியும் விரைவில் மடித்து வைக்க கூடிய ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிடும் என தெரிய வந்துள்ளது.