ஸியோமி கடைகளில் ‘மேட் இன் இந்தியா’ பானர்கள்

டில்லி

ந்தியச் சீன எல்லை  பிரச்சினை அதிகரித்து வருவதால் அனைத்து ஸியோமி விற்பனைக் கடைகளிலும் ‘மேட் இன் இந்தியா’ என்னும் பானர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சீனப்படைகள் லடாக் எல்லையில் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து சீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.   இந்தியாவில் சீனத் தயாரிப்பு ஸ்மார்ட் போன்கள் அதிக அளவில் விற்கப்படுகின்றன.   இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட் போன்களில் 5 இல் நான்கு சீன தயாரிப்பாகும். இதில் ஸியோமி முன்னிலையில் உள்ளது.

தற்போது சீனப் பொருட்கள் புறக்கணிப்பு வலுத்து வருவதால் சீன மொபைல் தயாரிப்பாளர்கள் தற்போதைய நிலையை கண்காணித்து வருகின்றனர்.  அகில இந்திய மொபைல் விற்பனையாளர் சங்கம் அனைத்து ஸியொமி விற்பனை நிலையங்களிலும் ‘மேட் இன் இந்தியா’ என்னும் பானர்கள் வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.   சீனப் பொருட்கள் எதிர்ப்பாளர்கள் கடைகளைச் சூறையாடலாம் என்னும் அச்சத்தில்  இவ்வாறு தெரிவித்துள்ளதாகச் சங்கத் தலைவர் கூறி உள்ளார்.

ஸியோமி நிறுவனம் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்துள்ளது.   அதே வேளையில் மொபைல் விற்பனையாளர்கள் விற்பனையில் இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.   தற்போது ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டு வருவதால் கல்விக்கு ஸ்மார்ட் போன்கள் தேவை அதிகரித்து வருகின்றன.  எனவே மொபைல்கள்  விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.  கடந்த 24 ஆம் தேதி ஸியோமியின் ரெட்மி நோட் 9 பிரோ மாக்ஸ் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த 50 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.