டில்லி:

காங்கிரஸ் ஆதரவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்ஷகி பச்சாவ் அண்டோலன் என்ற ஜனநாயகத்தை காக்கும் அமைப்பு அழைத்ததின் பேரில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்ஹா வரும் 14ம் தேதி முதல் 3 நாட்களுக்கு குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில் குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.

அகமதாபாத், ராஜ்காட், சூரத் ஆகிய இடங்களில் வர்த்தக மக்களுடன் கலந்துரையாடி சொற்பொழிவு ஆற்றுகிறார். நரேந்திரமோடி அமைச்சரவையில் இவரது மகன் ஜெயந்த் சின்ஹா அமைச்சராக உள்ளார். இவர் மத்திய அரசின் பெரும் சாதனையாக கருதப்படும் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி.யால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பேசவுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்ரம் ராஜ்காட்டில் வர்த்தர்களுடன் கலந்துரையாடினார். எவ்வித அரசியல் சாயமும் இன்றி அவர் இதில் கலந்துகொண்டார்.