பணமதிப்பு இழப்பு நடவடிக்கை துக்ளக் தனமானது : யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு

கமதாபாத்

மோடியின் துக்ளக் தனமான பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலை இழந்துள்ளது என கூறி உள்ளார்.

முன்னாள் பா ஜ க அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சமீப காலமாக மோடியின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக தாக்கி வருகிறார்.    இந்தியப் பொருளாதாரம் நலிவடைந்ததற்கு மோடியின் நடவடிக்கைகளே காரணம் என கூறி வருவது கடும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.  இந்நிலையில் லோக்சாகி பச்சாவ் அப்யான் என்னும் அமைப்பு நடத்திய ஒரு நிகழ்வில் அவர் பேசியது மேலும் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.

அவர் தனது உரையில், “பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு உண்டாகி உள்ளது.   இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையானது சரியான துக்ளக் தனமாக உள்ளது.   முகமது பின் துக்ளக் செய்தது போன்ற ஒரு நடவடிக்கை இது.    புதிய நாணயம் அறிமுகம் செய்யும் போது பழைய நாணயத்தை செல்லாது என அறிவித்ததின் மூலம் தானும் ஒரு துக்ளக் என மோடி நிரூபித்து விட்டார்.

இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை அவர் முக்கியம் என நினைத்ததாலோ என்னவோ அவரே அறிவித்தார்.  நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் அறிவிக்கவில்லை.    ஒரு மணி நேரம் அவர் ஆற்றிய உரையில் கறுப்புப் பணம், கள்ள நோட்டு, பயங்கரவாதம் இதெல்லாம் சொல்லப்பட்டது.   ஆனால் ரொக்கமற்ற பரிவர்த்தனை,  டிஜிட்டல் எகானமி என ஒரு முறை கூட சொல்லப் படவில்லை.   அதன் பிறகு பணம் யாரிடமும் இல்லாததால் ரொக்கமற்ற பொருளாதாரம் என பேசினார்.

இப்போது சுமார் 18 லட்சம் முதலீடுகள் மீது விசாரணை நடப்பதாக மோடி கூறுகிறார்.  இதனால் உலக நாடுகள் மத்தியில் இந்தியா திருடர்களின் நாடு என பெயர் வாங்கி விட்டது.   நாம் அனைவருமே சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு விட்டோம்.   உண்மையில் இந்த நடவடிக்கையால் நாட்டுக்கு ரூ. 3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது மட்டுமே நிகழ்ந்தது.

தற்போது அனைத்துமே இவர்கள் ஆட்சி புரியும் போது தான் நிகழ்ந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்.  அப்படியானால் இவர்களுக்கு முன்பு ஆண்ட அடல் பிஹார் வாஜ்பாய் எதுவுமே செய்யவில்லையா?  அவரும் இவர்களுக்கு முன்பு ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் தானே.   அவர் ஒன்றும் செய்யவில்லை என்னும் போது எப்படி அவருக்கு பாரதரத்னா வழங்கினீர்கள்?   நீங்கள் மட்டுமே சரி, மற்றவர்கள் தவறானவர்கள் என நினைப்பது எதற்கும் உதவாது.

தற்போதைய நிதி அமைச்சர்  நம் பொருளாதாரம் வலுவுடன் இருப்பதாகவும் பண வீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் சொல்கிறார்  அது மட்டும் அல்ல, பங்குச்சந்தை எழுச்சி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க அதிபரின் நற்சான்றிதழ் கிடைத்து விட்டதாகவும் கூறுகிறார்.   இதற்கெல்லாம் மோடி தான் காரணமா?  சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை குறைந்துள்ளதால் நிகழ்ந்தவை இவைகள்.   உங்கள் குஜராத் சிங்கம் சத்தமிட்டதும் எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை குறைக்க வில்லை.    உங்களின் நடவடிக்கைகளால் நமது பொருளாதாரம் தற்போது ஒரு காலை இழந்துள்ளது.  ஒரே காலில் நின்றுக் கொண்டிருக்கிறது.   நமக்கு தற்போதைய தேவை உள்நாட்டு சேமிப்புகளே, அன்னிய முதலீடு இல்லை” என தெரிவித்துள்ளார்.