நொய்டா

மாலத்தீவு விவகாரத்தில் உடனடியாக இந்தியா தலையிட வேண்டும் என பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார்.

மாலத்தீவில் 2013 ஆம் வருடம் யாமின் அப்துல் கயூம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தனக்கு அரசியலில் போட்டியாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வந்தார்.  முன்னாள் அதிபர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறைதண்டனை தரப்பட்டது.   அவரோடு கைது செய்யப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.    இதை உச்ச நீதிமன்றம் கண்டித்து அவர்களின் தகுதி நீக்கம் செல்லாது என அறிவித்தது.

இவர்கள் அனைவரும் தனது அரசை கவிழ்ப்பார்கள் என எண்ணி அதிபர் யாமீன் அவசர நிலைப் பிரகடனம் செய்தார்.  உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.   இதனால் ராணூவம் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகிறது.  முன்னாள் அதிபர் நஷீத் தங்களுக்கு இந்தியா உதவ் வேண்டும் என கூறி உள்ளார்.

பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நொய்டாவில் செய்தியாளரளை சந்தித்தார்.   அப்போது அவர், “மாலத்தீவில் ஏராளமானோர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர்.   அவர்கள் தற்போது மாலத்தீவில் இல்லை என்றாலும் விரைவில் திரும்புவார்கள்.  அது நமக்கு அபாயம் ஆகும்.

தற்போது இந்தியா வெறும் மௌன பார்வையாளராக இருப்பது தவறாகும்.  இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும்.     அதுதான் நமது பாதுகாப்புக்கு நல்லது.   தேவையானால் இந்தியா தனது ராணுவத்தை மாலத்தீவுக்கு அனுப்பலாம்.   ஆனால் மத்திய அரசு அதுகுறித்து கவனமாக முடிவு எடுக்க வேண்டும்.

மாலத்தீவூக்கு சொந்தமான 17 அல்லது 18 தீவுகளை சீனா வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.  இது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.   அதனால் நாம் உடனடியாக வங்க தேசத்தில் செயல்பட்டதைப் போல செயல் பட்டால் உலகநாடுகள் நம்மை மதிக்கும்.    மத்திய அரசின் துரித மற்றும் உடனடி நடவடிக்கை இவ்விவகாரத்தில் தேவையாகும்.”  என தெரிவித்துள்ளார்.