பொருளாதார வளர்ச்சியிலும் பெண்கள் பாதுகாப்பிலும் நாடு பின் தங்கி உள்ளது : யஷ்வந்த் சின்ஹா

டில்லி

பொருளாதார வளர்ச்சியிலும் பெண்கள் பாதுகாப்பிலும் இந்தியா பின் தங்கி உள்ளதாக யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார்.

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகளை விட முன்னேறி உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.   பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமுலாக்கம் போன்றவைகளினால் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறி வருகிறது.   அத்துடன் தொழில் வளர்ச்சியிலும், பெண்கள் பாதுகாப்பிலும் இந்தியா மிகச் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இதை பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா மறுத்துள்ளார்.  இது குறித்து அவர், “

நாடு பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ளதாக அரசு கூறி வரும் நிலையில் உண்மை வேறு விதமாக உள்ளது.   பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாட்டின் வங்கிகளில் இவ்வளவு வாராக்கடன் இருக்காது.    மேலும் விவசாயிகளுக்கு துயர் இருக்காது.   இத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்க மாட்டார்கள்.  சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இவ்வளவு நசிந்து இருக்காது.   ஊழல் இவ்வளவு அதிகரித்து இருக்காது.

தற்போது பெண்கள் மிகவும் பாதுகாப்பின்றி உள்ளனர்.  பலாத்காரம் அதிகரித்து வரும் நிலையில் அந்த குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில்லை.    பாஜகவை சேர்ந்தவர்களில் பலரே அது போன்ற குற்றங்களில் ஈடு படுகின்றனர்.   சிறுபான்மையினர் நசுக்கப்படுகின்றனர்.   தலித்துகள் மற்றும் பழங்குடியினர்,  பொருளாதார நலிவுற்றோர் மீது இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.   அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள பல உரிமைகள் கேள்விக்குள்ளாகி இருக்கிறது,” எனக் கூறி உள்ளார்.