மாலை 6 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா..!

 

பெங்களூரு: கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக, மாலை 6 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கிறார் பாரதீய ஜனதாவின் எடியூரப்பா.

இன்று காலை 10.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா. அதன்படி, ஆளுநரும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர், ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார் எடியூரப்பா. அப்போது பேசியதாவது, “ஆளுநர் என்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். மாலை 6 மணிமுதல் 6.15 மணிக்குள் முதல்வராக பதவியேற்கிறேன்.

அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவர்? என்பது குறித்து இப்போதைக்கு எதையும்கூற முடியாது. கட்சித் தலைமையிடம் ஆலோசித்தப் பின்னரே எதையும் தெரிவிக்க முடியும்.

எனது பதவியேற்பு விழாவில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் இதர எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்க வேண்டுமென்பதே எனது விருப்பம். அவர்களுக்கு நான் முறைப்படி அழைப்பு விடுப்பேன்” என்றார்.

கர்நாடகாவில் நடைபெற்றுவந்த காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு, கடந்த செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனையடுத்து, அடுத்த 3 நாட்களில் பாரதீய ஜனதா அரசு பதவியேற்கிறது.

கர்நாடக கூட்டணி அரசைக் கவிழ்க்க நடத்தப்பட்ட அரசியல் சித்து விளையாட்டுகள் நாம் அறிந்ததே.