பெங்களூரு:

ர்நாடகாவில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பாரதியஜனதா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடியூரப்பா ,இன்று மீண்டும்  கவர்னர் வஜுபாய் வோலாவை சந்தித்தார்.

அப்போது, பாரதியஜனதா கட்சி ஆட்சி அமைக்க அவகாசம் அளிக்க  கோரி க கடிதம் கொடுத்தார்.

கடந்த 12-ந் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

முல்பாகல் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும், கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்

இந்த நிலையில்  ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி பாஜவும், காங்கிரஸ் ஆதரவு கடிதத்துடன் ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமியும் நேற்று கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற  பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு மல்லேசுவரத்தில் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதியஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக  எடியூரப்பா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் ஆகியோருடனன் மாநில கவர்னரை சந்திக்க சென்ற எடியூரப்பா, கவர்னரிடம் ஆட்சி அமைக்க அவகாசம் கோரி   கடிதம் அளித்துள்ளார்.