25 நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம்! 15 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்பு?

பெங்களூரு:

ர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்கள் கடந்த நிலையில், 4 கேபினட் கூட்டமும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்கட்டமாக 15 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு ஆட்சியை பிடித்த மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, கடந்த  ஜூலை 26-ந்தேதி பதவியேற்றார்.  ஆனால், அவரால் அமைச்சரவையை அமைக்க முடியாமல் இழுபறி நீடித்து வந்தது. பாஜக எம்எல்ஏக்களும், அவருக்கு ஆதரவு அளித்த மாற்றுக்கட்சியினரும் அமைச்சசர் பதவி கேட்டு வலியுறுத்தி வந்ததால், யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதுதொடர்பாக எடியூரப்பாக 2 முறை டில்லி என்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க முயன்றும், முடியாத நிலையில், கர்நாடகாவில் பெய்த கனமழை பாதிப்பு மற்றொருபுரம் நெருக்கடியை கொடுத்தது.

இந்த நிலையில்,   பல்வேறு துறைகளின் செயலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, கேபினட் கூட்டத்தை  தனி ஆளாக  நடத்தி வந்தார் எடியூரப்பா. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தற்போது மேலிட தலைவர்களின் உத்தரவுடன் 15 பேர் கொண்ட அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவு  15 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சசரவையில், மூத்த பாஜக தலைவர்களான ஈஸ்வரப்பா, அசோகா, ஸ்ரீராமுலு, கோவிந்தகார ஜோல் போன்றோர்  இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.