ஆட்டம் காணும் எடியூரப்பா நாற்காலி: பா.ஜ.க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரகசிய கூட்டம்…

பெங்களூரு:

ர்நாடக முதல்வருக்கு எதிராக 4 பக்க அளவிலான மர்ம கடிதம் வந்த நிலையில், பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக எடியூரப்பா நாற்காலி ஆட்டம் கண்டு வருகிறது….

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாளம் ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்வராகவும், துணைமுதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் இருந்த நிலையில் கூட்டணி மந்திரிசபை ஆட்சி நடத்தி வந்தது.

இந்த ஆட்சியை எடியூரப்பா தரப்பினர், ஆபரேசன் தாமரை என்ற பெயரில் அதிருப்தி எம்எல்ஏக்களை விலைபேசி, ஆட்சியை கவிழ்த்தனர். இதையடுத்து ஆட்சியை கைப்பற்றிய எடியூரப்பா முதல்வர் பதவில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியினர் பாஜகவில் சேர்ந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறார் எடியூரப்பா.

‘கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது  பா.ஜ.க. மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் எடியூரப்பா அவர்களுக்கு பதவி வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

முதல்வரின் இந்த நடவடிக்கை பாஜக மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாநில பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த நிலையில், எடியூரப்பா பதவி விலக வலியுறுத்தி பெயரிடப்படாத வகையில் 4 பக்கம் கொண்ட கடிதம் வெளியாகி கர்நாடக அரசில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான உமேஷ்கட்டி எடியூரப்பா மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.  இவர் எடியூரப்பா குறித்து, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசானை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கர்நாடக அமைச்சர்  ஜெகதீஷ் ஷெட்டர் இல்லத்தில், பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள்  ரகசிய கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக எடியூரப்பா நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. பாஜக ஆட்சியும் எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

எடியூரப்பா மாற்றமா? 4 பக்க கடிதத்தால் பரபரப்பு