பெங்களூரு:

ர்நாடக முதல்வர்  எடியூரப்பாவின் கைகளை பாஜக தலைமை கட்டிப்போட்டு உள்ளது  என்று, கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்த கர்நாடக காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களும் பாஜகவில் பதவிக்கேட்டு போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் விருப்பமிருந்தால் பாஜக சார்பில் போட்டியிடலாம் என முதல்வர்  எடியூரப்பா அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், பதவி ஏற்றதைத் தொடர்ந்து பல முறை டில்லி சென்றுள்ள எடியூரப்பா, அங்கு பிரதமர் மோடியை சந்திக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், அவரை சந்திக்க நேரம் ஒதுக்க மோடி மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய  மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, பிரதமரிடம் பேச முதல்வர் எடியூரப்பா அஞ்சினால் பிரச்சனைக்கு எப்போது தீர்வு காண்பது என்று கேள்வி எழுப்பியவர், அவரது கைகள் கட்டப்பட்டு உள்ளன என்றார்.

மேலும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய சித்தராமையா, வெள்ள பாதிப்பு பற்றி பிரதமரிடம்  பேச காங்கிரஸ் கட்சியினர் கடிதம் அனுப்பி இருந்தும் பெங்களூர் வந்த பிரதமர், காங்கிரசாரை சந்திக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.