பெங்களூரு :
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுக்க பரவி பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, கோடிக் கணக்கானோரின் வேலையிழப்பிற்கும் காரணமாக இருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக நடந்த இழப்புகளுக்கு சீனாவும் அமெரிக்காவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றன.  உலகமே ஸ்தம்பித்து நின்றிருக்கும் இந்த நேரத்தில், சீனாவில் உள்ள தங்களது முதலீடுகளை நிறுத்தவும், அங்குள்ள நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு மாற்றவும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன.

சீனாவிலிருந்து வெளியேற நினைக்கும் நிறுவனங்களில் பெரும்பாலானவை, தங்களது அடுத்த விருப்பமாக இந்தியாவை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது என்பதால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தங்களை தயார் படுத்திவருகின்றன.
சீனாவிலிருந்து இந்தியா வரும் நிறுவனங்களை இழுக்கும் முயற்சியாக கர்நாடகா அரசு தங்கள் மாநில தலைமை செயலாளர் டி.எம். விஜய் பாஸ்கர், தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

 

 
கர்நாடகா அரசு அமைத்துள்ள குழுவில், ஜப்பான் வெளி வர்த்தக குழு, கொரியா வர்த்தக முதலீட்டு அபிவிருத்தி முகமை, தைவான் வெளி வர்த்தக அபிவிருத்தி கவுன்சில் மற்றும் கொரியா, அமெரிக்கா, தைவான், பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிகளும் இந்த குழுவில் உள்ளனர்.
இதன் மூலம், கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அந்நிய நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு தயாராகி வருவது அண்டை மாநிலங்களை உற்று நோக்க வைத்திருக்கிறது.