எடியூரப்பா ஆட்சி அமைத்தது ‘ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்:’ ராகுல்காந்தி

டில்லி:

ர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், பாஜக ஆட்சி அமைத்துள்ளது  ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று ராகுல் காந்தி  கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 12ந்தேதி நடைபெற்று 15ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், அருதிப்பெரும்பான்மைக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 104 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க மாநில கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்து, பதவி பிரமாணமும் செய்து வைத்து, குதிரை பேரத்துக்கு 15 நாட்கள் அவகாசமும் கொடுத்துள்ளார்.

இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சட்டத்தை மீறி, கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளதாக  அரசியல் கட்சியினர் கடும் கண்டங்களை  தெரிவித்து வருகின்றனர்.

எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க தடை விதிக்க கோரி, காங்கிரஸ் சார்பில் உச்சநீதி மன்றத்தில் நள்ளிரவில் முறையிடப்பட்டு, உடனடியாக விசாரணை நடைபெற்றது.. விடிய விடிய விசாரணையை தொடர்நது,  எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை  எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதற்கிடையில்  இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில்,  பா.ஜ.வின் பகுத்தறிவு வலியுறுத்தல். பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். பாஜக, வெற்றியை கொண்டாடும் வேளையில், ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியா துக்கம் கொள்ளும்”  என்று பதிவிட்டுள்ளார்.