கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் : மேலிடம் அனுமதி தராததால் விரக்தியில் பி.எஸ். எடியூரப்பா…

 

கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க.ஆட்சி நடந்து வருகிறது.

அந்த மாநிலத்தில், இப்போது 27 அமைச்சர்கள் உள்ளனர். இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன.

அந்த இடங்களை பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த பலர் துடிக்கின்றனர்.

நீண்ட காலமாக பா.ஜ.க.வில் உள்ள மூத்த தலைவர்களும் அமைச்சர் ஆசையில் உள்ளனர்.

மந்திரிசபையை விரிவு படுத்துவதற்கு அனுமதி கேட்க, எடியூரப்பா, கடந்த நவம்பர் மாதம் டெல்லி சென்றிருந்தார்.

‘பொறுத்திருங்கள்’ என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறி விட்டதால் ஏமாற்றத்துடன் எடியூரப்பா பெங்களூரு திரும்பி விட்டார். இந்த நிலையில் பா.ஜ.க உறுப்பினர்கள், தங்களுக்கு மந்திரி பதவி உறுதி என பகிரங்கமாக பேட்டி அளித்து வருகிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை எடியூரப்பாவை பா.ஜ.க. எம்.எல்.சி. சங்கர் சந்தித்து பேசினார்.

பின்னர் பேட்டி அளித்த அவர் “இன்னும் இரண்டு நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். நான் மந்திரி ஆகப்போகிறேன்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று எடியூரப்பாவிடம் செய்தியாளர்கள் “எப்போது அமைச்சரவை மாற்றம் ?” என கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா விரக்தியுடன் “அமைச்சரவை விரிவாக்கமா? இது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்” என டெல்லியை நோக்கி கை நீட்டினார்.

“யாருக்கும் அமைச்சர் பதவி அளிப்பதாக நான் உறுதி அளிக்கவில்லை” என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.

– பா. பாரதி