எதிர்பார்த்தது போல அமைச்சரவை பதவிகள் கிடைக்காத காரணத்தால் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால், கர்நாடக பாஜகவில் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் இன்று காலை முதலமைச்சர் எடியூரப்பாவின் கீழ் 17 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது. 17 உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட நிலையில், இரு அமைச்சர்களின் ஆதரவாளர்களாக உள்ள எம்.எல்.ஏக்கள் சிலர், தாங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படாததை கண்டித்து டயர்களை கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பதவியேற்பு முடிந்த சில மணி நேரத்திலேயே இதுபோன்ற எதிர்ப்புகள் கிளம்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில எம்.எல்.ஏக்கள், வித்தியாசமான முறையில் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

சில எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவையே புறக்கணித்த நிலையில், இரு எம்.எல்.ஏக்கள் டில்லி தலைமையிடம் இது தொடர்பாக முறையிடவும் சென்றிருக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் தான் முன்னரே டில்லியில் உள்ள பாஜக தலைமையிடம் அனுமதி பெற்ற எடியூரப்பா, அமைச்சரவை விரிவாக்கம் மேற்கொள்ள காலம் எடுத்துக்கொண்டார். ஆனாலும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த, கட்சியின் தலைமையால் இயலவில்லை.

இன்றைய அமைச்சரவை விரிவாக்க நிகழ்வை மூத்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பாலசந்திர ஜாகிஹோலி, ஜே.எச் திப்பரெட்டி, ரேனுகாச்சார்யா, முருகேஷ் நிராணி, சி.பி யோகேஷ்வர், பசவன்கவுடா பாட்டில் யாத்நல், குலிஹடி சேகர் மற்றும் உமேஷ் கட்டி ஆகிய எம்.எல்.ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.

இது தொடர்பாக கன்னட செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள எம்.எல்.ஏ குலிஹடி சேகர், ”நான் பாஜகவில் இணைந்த பின்னர் மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் இழந்துவிட்டேன். 2008ம் ஆண்டு ஆட்சி அமைக்க நான் அதிக அளவில் உதவியிருக்கிறேன். நான் சுயேட்சையாகவே தொடர்ந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

எம்.எல்.ஏ திப்பாரெட்டி செய்தியாளர்களிடம், “நான் இப்படி ஒரு அமைச்சரவை உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் உட்பட பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் தான் உள்ளோம். எங்களின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் நாங்கள் ஒன்றுகூடி ஆலோசிப்போம். டில்லியில் உள்ள எங்கள் தலைமையிடம் முறையிட முதலில் முடிவெடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார். அதேநேரம், திப்பாரெட்டியின் ஆதரவாளர்கள் பலரும் அமைச்சரவை விரிவாக்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்து மாநில அளவில் பல இடங்களில் டயர்களை தீயிட்டு கொளுத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மற்றொரு மூத்த எம்.எல்.ஏவான எஸ்.அங்காரா செய்தியாளர்களிடம், “எனக்கு அமைச்சரவை விரிவாக்க பட்டியலை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. எனக்கு சதானந்த கவுடா அன்று அளித்த வாக்குறுதிகளை நான் நினைவுக்கூறுகிறேன். உண்மையான விசுவாசிகளை எடியூரப்பா புறக்கணித்துள்ளார். இது சதானந்த கவுடாவுக்கான நேரம். மீண்டும் அவரே முதல்வராக வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த ஒரு வருட காலமாக குறைவான எம்,எல்.ஏக்களின் எண்ணிக்கையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு பெரும் போராட்டத்திற்கிடையே நடந்து வந்தது. தற்போது நடைபெறும் பாஜக அரசும் பெரிய வித்தியாசம் இல்லாமல், சில எம்.எல்.ஏக்களின் கூடுதல் ஆதரவில் ஆட்சியை நடத்தி வருகிறது. சில எம்.எல்.ஏக்கள் பின்வாங்கினால், மீண்டும் ஆட்சி கவிழும்.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ப்ரஜேஷ் கல்லப்பா, “அதிருப்திகள் மிக வேகமாக வருகிறது. எடியூரப்பா அரசின் அமைச்சரவை விரிவாக்கம் 3 வார இழுபறிக்கு பின்னர் இன்றைக்கு நல்ல முறையில் நடந்துள்ளது. ஆனால் அதை எதிர்க்கும் அதிருப்தியாளர்கள் இன்றைக்கு ஒன்று கூடி பேசி, அடுத்தக்கட்ட திட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் குரல்கள் வேகமாக வெளிப்படுத்தப்பட்டு வருவதால், கர்நாடக பாஜக அரசும் கவிழும் என்றே தெரிகிறது. போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாமல், போராடும் சூழலுக்கு எடியூரப்பா அரசு தள்ளப்படும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடியூரப்பா கடந்த ஜூலை 23ம் தேதி காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள அரசு கவிழ்ப்புக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் நேற்று வரை தான் ஒருவர் மட்டுமே அமைச்சரவையில் இருந்த நிலையில், இன்றைக்கு அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். தற்போதைய நிலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதன் தீர்ப்புகள் எந்த பக்கம் சாதகமாக வரும் என்பதை பொருத்தே அடுத்தக்கட்ட நகர்வுகள் கர்நாடக அரசியலில் தென்படும். அதேநேரம், தகுதிநீக்கம் சரி எனும் பட்சத்தில், பாஜகவும் சில எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு தற்போது 105 உறுப்பினர்கள் உள்ளனர். 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால், அவையின் பெரும்பான்மை எண்ணிக்கை 104-ஆக குறைந்தது. 105 உறுப்பினர்களுடன் இதன் காரணமாகவே பாஜக நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்று, ஆட்சியை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.