பெங்களூரு

லிங்காயத்துக்களை தனி மதத்தினராக அறிவிக்க உள்ளதை எதிர்க்கும் கர்னாடகா தலைவர் எடியூரப்பா முன்பு அதே கோரிக்கையை ஆதரித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கர்னாடகாவில் உள்ள லிங்காயத்துக்கள் தங்களை சிறுபான்மையின மதமாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டதை அடுத்து அவர்களுக்கு சிறுபான்மை மதம் என அரசு அங்கீகரிக்க உள்ளது,   கடந்த வருடம் ஜூலை மாதம் லிங்காயத்துக்கள் தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என பிடாரில் ஒரு பேரணி நிகழ்த்தினர்.   அப்போது கர்னாடகாவின் பாஜக தலைவர் எடியூரப்பா லிங்காயத்துக்கள் இந்துக்களின் ஒரு பிரிவினரே எனவும் அவர்களை தனி மதத்தினர் என அறிவிக்கத் தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் வருடம் அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங்குக்கு கர்னாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு அறிக்கை ஒன்றை அளித்தனர்.   அகில பாரத வீரசைவ மகாசபையின் தலைவர் ஷாமனூர் சிவசங்கரப்பாவால் எழுதப்பட்ட அந்த அறிக்கையில் தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியிறுத்தி இருந்தனர்.

அதன் கீழ், “கர்னாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா கோவா மற்றும் உள்ள பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகலாகிய நாங்கள் வீரசைவ லிங்காயத் இனத்தை தனி மதமாக அறிவிக்க  பரிந்துரை செய்கிறோம்”  என அனைத்து மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.   அதில் கர்னாடகா மாநில உறுப்பினர்களில் ஒருவரான எடியூரப்பாவும் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் எடியூரப்பா மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த பசவராஜ் பொம்மை, பிரபாகர் கோர், உமேஷ் கட்டி, லட்சுமண் சாவடி, அரவிந்த் பெல்லாட் ஆகியோரும் கையெழுத்து இட்டுள்ளனர்.   அத்துடன் தற்போது லிங்காயத்துக்களை தனி மதமாக அறிவிப்பதை எதிர்த்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த பசவராஜ் கொரட்டி, சிவசங்கர், மற்றும் மல்லிகார்ஜுஜ் குபா ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத் தக்கது,