பெங்களூரு: அமித்ஷாவின் இந்தி மொழி தொடர்பான கருத்துக்கு அவரின் சொந்த கட்சியின் முதலமைச்சர் எடியூரப்பாவிடமிருந்தே எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகாவில் கன்னடத்திற்கே முதலிடம் என்ற கொள்கையிலிருந்து எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளார் அவர்.

பொதுவாகவே, தென்னிந்தியாவில் இந்தி மொழி திணிப்பு ஏற்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. வடஇந்தியர்கள் தங்கள் மீது மேற்கொள்ளும் கலாச்சார ஆக்ரமிப்பாக இந்தி திணிப்பை கருதுகின்றனர் தென்னிந்தியர்கள்.

இந்தமுறை அமித்ஷாவின் இந்தி முழக்கத்திற்கு எதிராக இந்தமுறை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட ஒன்று சேர்ந்துள்ளன.

எடியூரப்பா கூறியுள்ளதாவது, “கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை கன்னடமே முதன்மையான மொழி. அதன் முக்கியத்துவம் தொடர்பாக நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ளமாட்டோம். கன்னட மொழி மற்றும் கர்நாடக மாநில பண்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.

கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் செல்வாக்கு மிக அதிகம். கர்நாடக மாநில வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை மற்றும் அதிக வாய்ப்புகள் என்ற கொள்கையை முதல்வர் எடியூரப்பாவும் ஆதரிக்கிறார்.

அமித்ஷாவின் அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும் கிண்டல்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.