ஜோலார்பேட்டை:

லகிரிமலை சுற்றுலா தலம் மீண்டும் 16ம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலையில் ரூ.2.81 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நிரந்தர கோடை விழா அரங்கை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அண்மையில் திறந்து
வைத்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கோடை விழா நடத்தப்படும். இதற்காக இங்கு நிரந்தரக் கலையரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.2.81 கோடி செலவில் புதிய கலையரங்கம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் சுமார், 1,500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

ஏலகிரி மலைவாழ் மக்களுக்குத் தேவையான வசதிகள் ஒவ்வொன்றாகச் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தடையில்லா மின்சாரம் வழங்க துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக தொடங்கப்படும்.

தமிழக முதல்வர் அறிவித்தப்படி ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா, உள் விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்களுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி அரங்கம் விரைவில் அமைக்கப்படும். மேலும் ஏலகிரிமலை சுற்றுலா தலம் மீண்டும் 16ம் தேதி திறக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.