ரியாத்:

வுதி அரேபியா அரசுக்கு சொந்தமான எண்ணை குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஏமனை சேர்ந்த ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் காரணமாக எண்ணை குழாய்கள் சேதமடைந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

சவூதி அருகில் உள்ள ஏமன் நாட்டில்  இஸ்லாமியர்களில்  சன்னி, ஷியா பிரிவினர்களிடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில், சன்னி பிரிவை சேர்ந்த அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது.ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதியின் எதிரி நாடான  ஈரான் ஆதரவு அளிக்கிறது.

இதன் காரணமாக ஈரான் ஆதரவுடன் ஹவுதி போராளிகள் அவ்வப்போது சவூதி மீதும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் உள்ள கச்சா எண்ணெய் குழாய்கள் மீது  ஆளில்லா விமானம் மூலம் ஹவுதி போராளிகள் குண்டுகள் வீசி தாக்குதல்கள் நடத்தினர்.

ரியாத் நகரின் அருகே உள்ள அஃபிஃப் மற்றும் டவாட்மி பம்பிங் ஸ்டேஷன்கள் வழியாக செல்லும் பைப்லைன் குழாய்களின் மீது இன்று அதிகாலை ஹவுத்தி போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த பைப்லைன்  சவூதியின் கிழக்கு மாகாணத்தில் இருந்து செங்கடல் பகுதிக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடத்தில் உள்ள குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த தாக்குதலில், குழாய்களின் பெரும்பகுதி சேதம் அடைந்ததால் சில மணி நேரத்துக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவூதி எரிசக்தித்துறை அமைச்சர்,  அரேபிய வளைகுடாவில் நடத்தப்பட்ட இந்த நாசவேலையின் மூலம் சவுதிக்கு மட்டுமல்லாமல்  உலக நாடுகளுக்கான பெட்ரோல் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தை சீர்குலைக்க  ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சவூதி அரசு ஹவுதி கிளர்ச்சியாகர்களை  எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.