ஏற்காடு: குறைந்த செலவில் சொர்க்கம்!

“தமிழகம் முழுதும் மழை பயத்தில் இருக்க…. இதுல ஏற்காடு சுற்றுலாவா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் ஏற்காட்டில் இப்போது குளுகுளு சீசன் சிறப்பாக இருக்கிறது. பொதுவாக, அக்டோபர் நவம்பர் மாதங்களில் சீசன் களைகட்டுவதில்லை.  ஆனால் சமீபத்தில் பெய்த மழையால், ஏற்காடு சரியான பதத்தில் இருக்கிறது.. அதாவது சுட்டெரிக்காத சூரியன்.. ஸ்வெட்டர் தேவைப்படாத குளிர். ( எப்போதுமே ஏற்காட்டின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேலோ 13 டிகிரிக்கு கீழோ சென்றதில்லை)

காணுமிடமெல்லாம் பசுமை.. கூட்டம் குறைவு. நெரிசல் இல்லாத இதமான மலைப் பயணம். வேறென்ன வேண்டும்?

எங்கே இருக்கிறது ஏற்காடு?

சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரம்.

எழில்மிகு ஏரி:
அழகு மலைகளைகுக்கு அணிகலனாக விளங்கும் ஏரி இங்கும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் இதுவும் ஒன்று. நடுவில் ஓர் நீருற்று.. கூடுதல் அழகு. ஜோடியாக வரும் தம்பதி, குடும்பத்தோடு வருபவர்கள் என்று அவரவர் தேவைக்கேற்ப  படகுகள் உண்டு.

அண்ணா பூங்கா:

ஏரியின் அருகில் அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் உண்டு.  மே மாதம் இங்கு நடைபெறும் மலர்க் கண்காட்சி ரொம்பவே பிரசித்தம்.  

லேடீஸ் சீட்:

ஏற்காடு மையப்பகுதியில் இருந்து இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில்

ஜொலிப்பதை கண்டு ரசிக்கலாம். வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும். ஆனால் பகலிலேயே மேகமூட்டம் என்பதால் தற்போது காண முடியாது.

(இதே போல அருகிலேயே ஜென்ஸ் சீட் என்ற காட்சி முனையும் உண்டு.)

கிள்ளியூர் அருவி:

ஏற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. கோடைக்காலங்களில் தண்ணீர் கொஞ்சமே வரும். தற்போது நன்றாக தண்ணீர் கொட்டுகிறது.

ஆனால் வாகனம் சிறிது தூரம்தான் செல்லும். பிறகு கொஞ்சம் நடக்க வேண்டும்.

பகோடா முனை:

இந்த முனையில் இருந்தும்  சேலம் மாநகரை கண்டு ரசிக்கலாம். தவிர இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் பார்க்க முடியும். கற்களால் கட்டப்பட்ட பழங்கால  இராமர் கோவில் ஒன்றும் இங்கு உண்டு.

கரடி குகை:

கரடிகள் தங்கிய (தங்கும்?)  இடம் என்பதால் இந்தப் பெயராம்.  இந்தக் குகையில் சேர்வராயன் மலைக் கோவிலுக்கு பாதை இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை.

 

சேர்வராயன் கோயில்:

சேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதுதான் இந்தப் பகுதியில் உயர்ந்த இடம்.  மே மாதம் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா ரொம்பவே  பிரபலம்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் சேர்வராயரும் காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிப்பதாக ஐதீகம். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் இருக்கிறது.

தாவரவியல் பூங்கா:

18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் இருக்கின்றன. கண்ணுக்கு விருந்து என்பதோடு, நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஏராளமான தகவல்களும் உண்டு.. தாவரங்கள் குறித்து.

(பொதுவாக ) சீசன் : ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை.

விழாக்கள்: மே மாதம் ஏழு நாட்கள் கோடைத் திருவிழா நடைபெறும்.  அதே மாதம் நடைபெறும் சேர்வராயன் கோயில் திருவிழாவும் பிரசித்தம்.

எப்படிச் செல்வது?

தமிழகத்தின் முக்கிய நகர்களில் ஒன்றான சேலத்தில் இருந்து மலை ஏறலாம்.

குறிப்பு: அனைத்து இடங்களையும் ஒரே நாளில் பார்த்துவிடலாம். அடுத்து ஓர் நாள் இயற்கையை அமைதியாக ரசிக்கலாம்.

500 ரூபாயில் இருந்து அறைகள் கிடைக்கின்றன. வசதியானவர்களுக்கு நட்டத்திர விடுதிகள் உண்டு. 60 ரூபாயில் இருந்து சாப்பாடு கிடைக்கிறது. ஒரு நாள் காரில் சுற்றி இடங்களைப் பார்ப்பதற்கு 1600 – 1800 கட்டணம். (நான்குபேர் செல்லலாம்)

செலவு குறைவான சொர்க்கம்.. ஏற்காடு.