டில்லி

டும் நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள யெஸ் வங்கி குறித்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு கேள்விகள் எழுப்பி உள்ளது.

வாராக் கடன் அதிகரித்ததால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கி  தினசரி செலவுக்கும் நிதிப் பற்றாக்குறையில் உள்ளது.   இந்த வங்கியின் நிர்வாகத்தைக் கையில்  எடுத்துள்ள ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இந்த வங்கியின் தலைவர் ராணா கபூரிடம் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

யெஸ் வங்கி விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மத்திய அரசிடம்  சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.   டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த கேள்விகள் இதோ

1.     எம் எஃப் ஹுசைன் வரைந்த ராஜிவ் காந்தியின் ஓவியம் 10 வருடங்களுக்கு முன்பு  பிரியங்கா காந்தியால் யெஸ் வங்கி தலைவருக்கு விற்கப்பட்டதை அவர் தனது வருமான வரி கணக்கில் அப்போதே காட்டியுள்ளார்.   அதற்கும் மோடியின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில் அந்த வங்கி ரூ.2 லட்சம் கோடி கடன் அளித்ததற்கும் என்ன தொடர்பு உள்ளது?

2.     பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு இரு வருடங்களுக்குப் பிறகு யெஸ் வங்கி அளித்த கடன் தொகை இருமடங்கும் மேல் அதிகரித்தது ஏன்?  அதாவது  மார்ச் 2016 கணக்கின் படி ரூ.98210 கோடி கடன் அளிக்கப்பட்டு மார்ச் 2018 கணக்கின் படி ரூ.203594 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.

3.     ரிசர்வ் வங்கி யெஸ் வங்கி குறித்து அறிக்கை அளித்துள்ள நிலையில் பிரதமர் மோடி கடந்த ஆறாம் தேதி அன்று யெஸ் வங்கி ஸ்பான்சர் செய்த ஒரு  கலந்தாய்வில்  ஏன் கலந்துக் கொண்டார்?

4.     யெஸ் வங்கி திவாலாகும் நிலையில் உள்ளது தெரிந்தும் பாஜக அரசு ஏன் ஒரு மாதம் முன்பு ரூ.1000 கோடியை அந்த வங்கியில் முதலீடு செய்தது? ரூ.1000 கோடி என்பது ஒரு பெரிய தொகை இல்லையா?

5.     மகாராஷ்டிராவில் முன்பு ஆட்சி செய்த ஃபட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசும் இதைப் போலவே முதலீடுகள் செய்துள்ளதா?

எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.

மேலும் அவர், ”அரசு ஊடகங்கள் இது போன்ற கேள்விகளைக் கேட்கப் பயப்படலாம்.   ஆனால் மக்கள் இதைத் தெரிந்துக் கொள்ள விரும்புகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.