இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கிச் சேவை மீண்டும் தொடக்கம்

டில்லி

ன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி தனது சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது.

வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக கடும் நிதிப்பற்றாக்குறையால் யெஸ் வங்கி பாதிக்கப்பட்டது.   அதையொட்டி கடந்த 5 ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.  அத்துடன் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் ரூ.50000 மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. யெஸ் வங்கியின் நிதிநிலையை மேம்படுத்தப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த சனிக்கிழமை அன்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்று அதாவது மார்ச் 18 ஆம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.   அத்துடன் இந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குனராராகவும் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரவிடப்பட்டது.

இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் தனது அனைத்துச் சேவைகளையும் யெஸ் வங்கி தொடங்குவதாக அறிவித்துள்ளது.  தற்போது வங்கியின் பணப் புழக்கத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அனைத்து ஏடிஎம் களிலும் தேவையான தொகை நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் வங்கியில் உள்ள வைப்பு மற்றும் சேமிப்பு முதலீடுகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.