என்ஆர்பி உண்டு, என்ஆர்சி இல்லை: மராட்டிய முதல்வரின் அறிவிப்பு இது!

புதுடெல்லி: மாநிலத்தில் என்ஆர்பி அமல்செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், அதேசமயம் என்ஆர்சி அமல்படுத்த அனுமதியில்லை என்றும் அறிவித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.

மராட்டியத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஒன்றிணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு சர்ச்சைகளுடன் நாட்களை நகர்த்திக் கொண்டுள்ளது. அதில், ஒரு பகுதிதான் மேறகண்ட அந்த அறிவிப்பு.

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகிய அனைத்தையுமே காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால், சிவசேனாவின் முடிவு எதிரிடையாக அமைந்துள்ளது.

முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளதாவது, “என்பிஆர் படிவங்கள் குறித்து நான் நேரடியாக ஆய்வு செய்வேன். என்.பி.ஆர். கணக்கெடுப்பால் யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது. அதேநேரத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. சிஏஏ, என்ஆர்சி ஆகியவை வேறு, என்பிஆர் என்பது வேறு. சிஏஏ அமல்படுத்தினால் யாரும் கவலைப்படத் தேவையில்லை.

என்ஆர்சி அமல்படுத்தினால் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஆதிவாசிகளும் பாதிக்கப்படுவார்கள். தற்போதுவரை என்.ஆர்.சி. குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. என்பிஆர் என்பது கணக்கெடுப்பு மட்டுமே. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த கணக்கெடுப்பால் யாரும் பாதிக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை” என்றார்.