நேற்று அத்திவரதரை 2.5 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.

காஞ்சிபுரம்

நேற்று அத்திவரதரை தரிசிக்க சுமார் 2.5 லட்சம் பேருக்கு மேல் வந்ததால் பக்தர்கள் நள்ளிரவு வரை தரிசனம் நடந்தது.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீரில் இருந்து எடுக்கப்படும் அத்திவரதர் பக்தர்களுக்கு 48 நாட்கள் தரிசனம் தருகிறார். தற்போது அவர் சயன கோலத்தில் அதாவது படுத்திருக்கும் நிலையில் தரிசனம் அளித்து வருகிறார். அத்திவரதர் தரிசனம் இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி உள்ளது.

இந்த இரு வாரத்தில் சுமார் 16 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் பலருக்கும் விடுமுறை நாளாகும். இதனால் பல ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சி நகரில் குவிந்தனர். நேற்று மட்டும் சுமார் 2.5 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த இரு வாரத்தில் நேற்று ஏராளமான பக்தர்கள் கூட்டம் இருந்ததால் காஞ்சி நகரே திணறியது. பக்தர்கள் கூட்டம் மேலும் மேலும் வந்தபடி இருந்ததால் அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது. பக்தர்கள் நேற்று நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்..