நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு 

டில்லி

நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு  செய்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியைத் தாண்டி உள்ளது.  இதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று வரை 1,11,,23,619 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1,57,275 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  அதில் சுமார் 1.08 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது சுமார் 1.69 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.  இதில் சுமார் 3 கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோரும் 45 வயதுக்கு மேற்பட்டுக் குறிப்பிட்ட சில உடல்நலக் குறைவு உள்ளோருக்கும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்துடனும் போடப்படுகிறது.  இதற்காக நாடு முழுவதும் 10000 அரசு மருத்துவமனைகள் மற்றும் 20000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன். “நேற்று காலை 9 மணி தொடங்கி இரவு 8:30 வரை ஆரோக்கிய சேது செயலி மற்றும் இணைய வாயிலாக 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நபர் தங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து விண்ணப்பித்திருப்பார். ஆகவே இதன் மொத்த எண்ணிக்கை 1 கோடியைக் கடந்திருக்கும்.

இந்த எண்ணிக்கைக்கும் உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு, புதிய உருமாறிய கொரோனா வைரஸ் காரணம் இல்லை.. விரைவில் இந்த கொரோனா பரவல் முடிவுக்குக் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.