வுகான்

நேற்று முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்னும் தகவல் வந்துள்ளது.

சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் வுகான் நகரில் முதல் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது.   அதன் பிறகு அந்த நகரில் மட்டுமின்றி சீனா முழுவதையும் அந்த வைரஸ் தாக்கி தற்போது 150 உலக நாடுகளைத் தாக்கி உள்ளது.   கடந்த சில நாட்களாகச்  சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.   ஆனால் பிற நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரொனாவின் ஊற்றுக்கண் எனக் கூறப்படும் ஹுபெய் மாகாணத்தில் தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.  கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த பகுதியில் தினசரி சராசரியாக 15000 நோயாளிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.  இதையொட்டி இந்தியா உள்ளிட்ட பல நாட்டவர்கள் இந்த பகுதியில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு கடும் முயற்சி எடுத்தது.  இது சற்று தாமதமான முயற்சி எனினும் அது நல்ல பலனை அளித்துள்ளது.  கடந்த சில நாட்களாகச் சீனாவில் இரண்டு இலக்கத்தில் மட்டுமே நோய் பரவியது.   தற்போது மிகவும் சொற்பமான மக்களே பாதிப்பு அடைந்துள்ளனர்.  குறிப்பாக நேற்று ஹுபெய் மாகாணத்தில் ஒருவர் கூட பாதிப்பு அடையவில்லை என்னும் செய்தியால் சீனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.