சென்னை

மிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் நேற்று மாலைக்குள் பலர் மது பானம் வாங்கி ஸ்டாக் செய்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் தமிழக அரசு மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல் படுத்தியது. இதையொட்டி டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது.   இந்த தடை உத்தரவு வரும் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தமிழக அரசு அறிவித்தது.  மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் வாங்கி இருப்பில் வைக்கக் குடிமகன்கள் நேற்று பகல் 12 மணி முதல் கடைகளை முற்றுகை இட்டனர்.  அரசு கூட்டம் கூடக் கூடாது என அறிவித்ததையும் கருத்தில் கொள்ளாமல் குடிமகன்கள் முண்டியடித்துக் கொண்டு மது வகைகளை வாங்கிக் குவித்தனர்.

வரும் ஏப்ரல்1 வரை 144 தடை உத்தரவு இருக்கும் என்பதால் பலர் பெட்டி பெட்டியாக மது வகைகளை நீண்ட வரிசையில் நின்று வாங்கினர்.  அப்போது பல கடைகளில் மக்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   வேகமாக வைரஸ் பரவி வரும் வேளையில் இவ்வாறு குடிமகன்கள் கூட்டமாகக் கூடியது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மக்கள் ஊரடங்கை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போது 21 ஆம் தேதி அன்று ரூ.220 கோடிக்கு மது விற்பனை நடந்தது.  இந்நிலையில் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் மது விற்பனை சுமார் ரூ.350 கோடியைத் தாண்டி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரும் 1 ஆம் தேதி வரை மது பானம் வாங்கி ஸ்டாக்கில் வைத்த குடிமகன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று இரவு மோடி வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.