யோகாவில் தங்கம் வென்றவர் வறுமையில் தவிப்பு

தான் யோகா செய்வதாக தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. தற்போது உலகம் முழுதும் யோகா பரவியிருப்பதாகவும், யோகா தினம் கொண்டாடப்படுவதாகவும் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள் பாஜகவினர்.

ஆனால்  யோகா போட்டியில் தங்கம் வென்ற பெண், வறுமையில் உழன்றுகொண்டிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின்ராய்பூரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது தாரா என்கிற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்  தாமினி சாஹு(19) என்னும் இளம்பெண். இவர், யோகாவில் தேர்ந்தவர்.

நேபாள் நாட்டின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய யோகா போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் பல யோகா போட்டிகளில் கலந்துக்கொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

 

 

தற்போது வறுமையின் பிடியில் தவிக்கும் இவர், கூலி வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

இது குறித்து தாமினி கூறுகையில், “காத்மண்டுவில் நடந்த யோகா போட்டியில் கலந்துக்கொள்ள சென்று வர, என்னிடம் பணம் இல்லை. ராய்பூர் நகரின் குருத் பகுதியை சேர்ந்த அமைச்சர் அஜய் சந்திரகரிடம் பண உதவி கோரினேன். ஆனால், அவர் உதவி செய்யவில்லை.

பிறகு 2% வட்டிக்கு கடன் வாங்கி போட்டியில் கலந்துக்கொண்டேன்.  தங்க பதக்கம் வென்றேன்.

வாங்கிய கடனை திருப்பி தர, தற்போது கூலி வேலை செய்து வருகிறேன்”  என்றார்.

மேலும், “தினமும் 8 முதல் 1௦ மணிநேரம் வேலை செய்தும், ஒரு நாளைக்கு 1௦௦ முதல் 15௦ ரூபாய் தான் கிடைக்கிறது. எனது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. எனது தாயும் என்னுடன் சேர்ந்து கூலி வேலை செய்கிறார்” என்கிற இவர், “மாலையில் நேரம் கிடைத்தால் யோகா செய்வேன்” என்கிறார்.

இவரது சோக நிலை குறித்து செய்திகள் வெளியாகி சுமார் ஒருவருடம் ஆகிவிட்டது. ஆனாலும் அரசோ, புகழ்பெற்ற யோகா மையங்களோ இவருக்கு உதவவில்லை என்பதுதான் சோகம்