கோவை: பத்மஸ்ரீ விருது வென்ற யோகா பாட்டி நானம்மாள், உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

கோவை மாவட்டம், கணபதி பாரதிநகர் பகுதியில் வசித்து வந்தவர் நானம்மாள். பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தார்.

அவர் சிறுவயதில், யோகாவை தமது தந்தையிடம் இருந்து கற்று தேர்ந்தார். 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு, பலருக்கும் அந்த கலையை கற்று தந்தார்.

2016ம் ஆண்டில் நாரிசக்தி விருது பெற்றார். 2017ம் ஆண்டில் யோகா ரத்னா விருது கிடைத்தது. யோகாவை அனைவருக்கும் கற்று கொடுத்ததால் யோகா பாட்டி என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு 2018ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.  சமீப நாட்களாக வயோதிகம் சார்ந்த உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில், உடல்நலனில் முன்னேற்றமின்றி, 99வது வயதில் கோவையில்  காலமானார். நானம்மாளுக்கு 2 மகன்கள், 3 மகன்கள், 12 பேரன், பேத்திகள், 11 கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளனர்.

அவரது மறைவு குறித்து மகன் பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: பின்னால் நடப்பதை முன்பே உணரும் வரம் பெற்றவர். 40 நாட்களுக்கு முன்பு, எனது தந்தையின் நினைவு தினத்தின் போது தமது மரணம் நெருங்கிவிட்டது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்றார்.