டில்லி

யோகாசனப் பயிற்சியால் முழங்கால் பாதிப்படையும் அபாயம் உள்ளதாக மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உலகெங்கும் யோகாசனப் பயிற்சி பிரபலம் அடைந்து வருகிறது.   இந்தியாவின் பாரம்பரிய பயிற்சியான யோகாசனம் கடந்த 1950களில் பிரிட்டனில் பிரபலம் ஆக தொடங்கியது.   அதன் பிறகு மகரிஷி மகேஷ் யோகியால் உலகெங்கும் பரவியது.   தற்போது சுமார் 3 கோடி பேர் தினமும் யோகாசனப் பயிற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.    ஆனால் யோகாசனப் பயிற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் செய்தி ஒன்று வந்துள்ளது.

உலகின் புகழ்பெற்ற முழங்கால் மருத்துவர்களில் ஒருவர் அசோக் ராஜகோபால்.  அவர் தற்போது, “யோகாசனப்பயிற்சி ஆசிரியர்களில் பெரும்பாலோருக்கு முழங்கால் பாதிப்பு அடைந்துள்ளது.   நான் பல பிரபல யோகா முழங்கால் அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.   யோகாசனப் பயிற்சியின் போது உடலை அளவுக்கு அதிகமாக நீட்டவும்,  மடக்கவும் நேரிடுகிறது.   அதனால் எலும்புகல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

யோகாசனப் பயிற்சி முறையாக உடலை அதிகம் வருத்தாமல் செய்தால் அது மிகவும் அருமையான பயிற்சியே.    ஆனால் யோகாசன ஆசிரியர்கள் பலர் அளவுக்கு அதிகாமாக உடலை வருத்திக் கொள்கின்றனர்.     சிறு வயதில் இருந்தே இந்த பயிற்சியில் ஈடுபடுவோருக்கே இந்த பாதிப்பு இருக்கும் போது இந்தப் பயிற்சிகளை திடீரென தொடங்குவோர் பெரிதளவில் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது.

பழக்கம் இல்லாமல் முழங்காலை மடக்கி அதிக நேரம் பயிற்சி செய்வது மிகவும் தவறாகும்.   இவ்வாறு செய்வோருக்கு 100 பேரில் ஒருவருக்கு  முழங்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக வஜ்ராசனம் செய்பவர்கள் பலருக்கு முழங்கால் பாதிப்பு உண்டாகி நான் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

மிகவும் புகழ் பெற்ற யோகாசன ஆசிரியர்களான பாபா ராம்தேவ்  போன்றவர்கள் யோகாசன பயிற்சியினால் உடல் வலுப்பெற்ற்ய் எவ்வித நோயும் அணுகாது எனவும் கடுமையான யோகா மற்றும்  பிராணாயாமத்தை செய்தால் எய்ட்ஸ் போன்ற கொடிய நோயும் குணமாகும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.