ரூ.60 கோடியில் செங்கல்பட்டில் யோகா, இயற்கை மருத்துவ மையம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

10 நாள் விடுமுறைக்குப்பின் தமிழக சட்டமன்றம் நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநரின் ஆய்வு குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை பேச சபாநாயகர்  அனுமதி மறுத்ததால், தி.மு.க., காங்கிரஸ் உள்பட அனைத்துஎ எதிர்க்கட்சிகளும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது,  இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகின்ற தொற்றா நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த “சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

இங்கு பட்டப் படிப்பு பிரிவு, பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இங்கே இயற்கையான சூழ்நிலையில், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறைகளான யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபங்க்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதுபோல,  ரூ.42 கோடி மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 தளங்கள் கூடுதலாக கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் சட்டமன்றத்தில் பேசினார்.