நிரவ் மோடியிடம் ரொக்கம் கொடுத்து நகை வாங்கிய யோகேந்திர யாதவ் உறவினர்கள்

டில்லி

சுவராஜ்கட்சி தலைவர்  யோகேந்திர யாதவின் உறவினர்கள் நிரவ் மோடியிடம் ரொக்கம் அளித்து நகை வாங்கிய விவரம் வருமான வரி சோதனையில் தெரிய வந்துள்ளது.

அரியானா மாநிலக் கட்சியான சுவராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆவார்.  ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.   இவரது தங்கை மற்றும் அவர் கணவர் இணைந்து கலாவதி மருத்துவமனை மற்றும் கமலா நர்சிங் ஹோம் உள்ளிட்ட பல மருத்துவ மையங்களை நடத்தி வருகின்றனர்.   யோகேந்திர யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடியை எதிர்த்து பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

அவருடைய சகோதரி மற்றும் அவர் கணவர் நடத்தும் அனைத்து  மரூத்துவ மையங்களிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை இட்டனர்.   அப்போது மருத்துவ மனையில் இருந்து ரொக்கப் பணம் ரூ.22 லட்சம் பிடிபட்டுள்ளது.   மேலும் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஏராளமான ஆவணங்களும் சிக்கி உள்ளன.   அந்த  ஆவணங்களை  ஆராய்ந்ததில் நிரவ் மோடியின் நிறுவனத்தில் இருந்து இவர்கள் ரொக்கமாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து நகை வாங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் அதிக பட்சமாக ரொக்கப் பணம் ரூ.4 லட்சம் மட்டுமே வைத்திருக்க முடியும்.   அத்துடன் இந்தப் பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது என்னும் விவரத்தையும் தர முடியாதாதால் இதை வருமான வரி அதிகாரிகள் கருப்புப் பணமாக வைத்துக்கொண்டுள்ளனர்.   அத்துடன் லட்சக்கணக்கில் நகை வாங்கும் போது ரொக்கப் பரிவர்த்தனைக்கு அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இது குறித்து தற்போது நடைப்பயணத்தில் உள்ள யோகேந்திர யாதவ் தனது டிவிட்டரில், “தயவு செய்து சோதனை செய்ய வேண்டும் என்றால் என் வீட்டை சோதனை செய்யுங்கள்   உறவினர்களை ஏன் குறி வைக்கிறீர்கள்.   இந்த சோதனைகள் எனை மிரட்டவே நடத்தப்பட்டுள்ளன.   நான் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்” என பதிந்துள்ளார்.

அத்துடன் இவரது தங்கை மற்றும் அவர் கணவர் கருப்புப் பணம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதற்கு யாதவ், “எங்கள் குடும்பத்தினரின் மருத்துவமனைகளில் திடீரென சோதனை நடத்தியதோடு அல்லாமல் அவர்கள் மருத்துவர்கள் எனவும் பாராமல் சிகிச்சை அறைகளில் கைது செய்துள்ளனர்.  அத்துடன் பிரசவமான பெண்கள் ஐசியூவில் உள்ள நிலையில் மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.   மோடிஜி இதன் மூலம் என்னை நீங்கள் மிரட்டலாம் ஆனால் அமைதிப் படுத்த முடியாது” என பதிந்துள்ளார்.