உத்தரப்பிரதேசத்தில் 3,350 டன் கொண்ட 2 தங்கச் சுரங்கம்: புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், 3, 350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட 2 சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் உத்தரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தின. அதன் முடிவில் இந்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பாகதீ என்ற இடத்தில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி மாவட்ட சுரங்க அலுவலர் கே.கே.ராய் கூறியதாவது: இந்த சுரங்கத்தை குத்தகைக்கு விட அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சோன்பத்ராவில் தங்க வைப்புக்கள் இருப்பதாக இந்திய புவியியல் மையம்  முதன்முதலில் 2005ல் கூறியது.

உத்தரப்பிரதேசத்தின் நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் மலைகளுக்கு அடியில் தங்க சுரங்கங்கள் உள்ளன என்ற கூற்று 2012ல் உறுதி செய்யப்பட்டது என்றார்.

இந்தியாவிடம் தற்போது, 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டால், நம் நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம், அமெரிக்காவிடம் 8133 டன்னும், ஜெர்மனியிடம் 3366 டன்னும், சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப்பிடம் 2814 டன்னும் தங்கம் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.