லக்னோ:

பசுக்களை பராமரிக்க ரூ. 200 கோடியை உத்திரப்பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது.


2019-20 ஆண்டுக்கான உத்திரப் பிரதேச பட்ஜெட்டை அம்மாநில நிதி அமைச்சர் ராஜேஸ் அகர்வால் தாக்கல் செய்தார்.

பசுக்களை பராமரிக்க கிராமப் புறங்களில் கோசாலா அமைப்பதற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ராஜேஸ் அகர்வால் அறிவித்தார்.

இந்த கோசாலாக்களிலிருந்து கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ள வருவாய் ரூ.165 கோடி, நலிவுற்ற மாடுகளை பராமரிக்க ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மனிதர்களை விட மாடுகளை உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகம் நேசிக்கிறார் என்று பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமாடுகளை இறைச்சிக்கு கொன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், இளைஞர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது குறித்து இதுவரை ஏதும் பேசாதது ஏன் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், கிராமங்கள்தோறும் மாடுகளை பராமரிக்க கோசாலா அமைக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

மாவட்ட பஞ்சாயத்து அளவில் 750 கோசாலாக்கள் அமைக்க உத்தரவிட்ட அவர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதற்காக ரூ.1.2 கோடியை ஒதுக்கினார்.

இதற்கிடையே, கடந்த வியாழனன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் மாடுகளின் எண்ணிக்கையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.